வடக்கே வாரணாசி என்றால் தென்னிந்தியாவின் காசி வயநாடு - ராகுல் போட்டியிடும் தொகுதியின் சிறப்புகள்
வட காசி என்று வாரணாசியை சொல்வது போல தென்னிந்தியாவின் காசி என்றழைக்கப்படுவது தான் கேரளாவின் வயநாடு. வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார் என்றால் தென்னாட்டின் காசியில் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் போட்டியிடுவதில் என்னே ஒரு ஒற்றுமை பாருங்களேன்.
உ.பி.யின் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது அந்தப் பெயர். வயநாட்டின் சரித்திரங்களை அலசிப் பார்க்கும் போது ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மற்றும் சுற்றுலா இடமாக விளங்குகிறது வயநாடு.
கேரள மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ள வயநாடு முற்றிலும் காடுகளும், வயல்களும் சூழ்ந்த ஒரு வித்தியாசமான மலைவாசஸ்தலம் ஆகும். இந்தப் பகுதியை வயல்நாடு என்றும் அழைப்பர்.நெல் விளைச்சலுக்கு பெயர் போன பூமி. நகர்ப் பகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. மொத்த மக்கள் தொகையே சுமார் 8 லட்சம் தான். கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் எல்லையோரம் அமைந்தது தான் இந்த வயநாடு.
1980-ல் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் இருந்து எல்லைகள் பிரிக்கப்பட்டு கேரளாவின் 12-வது மாவட்டமாக உருவானது தான் வயநாடு மாவட்டம். தொகுதி சீரமைப்பில் 2009-ல் வயநாடு மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கம் பெற்றது. 7 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு மக்களவைத் தொகுதியில் 2009,2014 தேர்தல்களில் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளது.
குளு குளு பகுதியான வயநாடு பகுதி ஆதி காலம் முதல் ஆன்மீக பூமியாகவும், வீரம் செறிந்த மண்ணாகவும் திகழ்ந்து வருகிறது. புகழ் பெற்ற லவகுசா ஆலயம், ஜெயின் ஆலயம், அம்புகுத்தி குடவறை கோயில்கள் மற்றும் குகை ஓவியங்கள் சிறப்பு பெற்றவை. இங்குள்ள புகழ் பெற்ற மகாவிஷ்ணு ஆலயம் அமைந்துள்ள திருநெல்லி தென்னாட்டின் காசி என்றழைக்கப்படும் ஒன்றாகும். இங்கு ஓடும் பாபனாசினி ஆறு இந்தியாவின் புனிதமான ஆறுகளில் ஒன்றாகும். 1991-ல் ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவருடைய அஸ்தி காசியின் கங்கை நதியில் கரைக்கப்பட்ட அதே நேரத்தில் வயநாட்டில் ஓடும் இந்த பாபனாசினி நதியிலும் கரைக்கப்பட்டது. அத்தகைய புனித பூமியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி போட்டியிடுவது தான் என்னே பொருத்தமான ஒன்று என்று பேசப்படுகிறது.