30 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறை... ஸ்ரீ ராம பக்தாஸ்களை ஓரங்கட்டிய பாஜக
பாஜக என்றாலே அயோத்தி ஸ்ரீ ராமபிரானை முன்னிறுத்தி வளர்ந்த கட்சிதான். ராமர் கோயில், ரத யாத்திரை, அயோத்தி யாத்திரை என்று கட்சியை வளர்த்தெடுத்த தலைவர்களை பாஜகவின் 30 ஆண்டு கால தேர்தல் அரசியலில் இந்த முறை முதன் முறையாக ஓரங்கட்டியுள்ளது பாஜக தலைமை . இதனை பாஜகவின் முன்னோடி அங்கங்களான விஸ்வ ஹிந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் வேதனையுடன் உற்று நோக்குகின்றன.
ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், ஜன சங்கம் போன்ற இயக்கத்தில் இருந்தவர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் பாஜக . 1980 களிலும் 90 களின் முற்பகுதியிலும் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை முன்னெடுத்து நடத்திய பல்வேறு போராட்டங்கள், யாத்திரைகளால் நாடு முழுவதும் பாஜக மளமளவென வளர்ச்சி பெற்றது. இதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், வினய் கத்தியார் போன்றோர் ஆவர். இதில் முக்கியமானவர் எல்.கே.அத்வானி தான் என்றால் மிகையாகாது. 1990-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடு முழுவதும் அத்வானி நடத்திய ரத யாத்திரை ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது என்றாலும் பாஜகவுக்கு பெரும் அடையாளத்தை காண்பிக்கச் செய்தது. அதே போன்றுதான் முரளி மனோகர் ஜோஷி போன்ற மற்றவர்களும் பங்களிப்பு செய்திருந்தனர்.
இவர்களுக்கெல்லாம் இதுவரை முக்கியத்துவம் கொடுத்து வரப்பட்டது. தற்போது தலைமைப் பொறுப்புகள் அமித்ஷா, மோடி போன்றோரிடம் வலுவாக சிக்கிக் கொள்ள, இந்த பழைய தலைகள் அனைவரும் இந்தத் தேர்தலில் ஏதோ ஒரு காரணம் கூறி ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அதிலும் அத்வானி, ஜோஷி போன்றோர் புறக்கணிக்கப்பட்டதை வேதனை கலந்த அதிருப்தியுடன் பார்க்கின்றனர் விஸ்வ ஹிந்து மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள்.
பாஜகவின் இந்த முடிவை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க் கட்சியினர் கிண்டல் செய்துள்ளனர். தேர்தல் ஆதாயம் வேண்டுமெனில் ராமரைக் கூட கை விட தற்போதைய பாஜக தலைவர்கள் தயாராகி விட்டனர் என்றும் விமர்சித்துள்ளனர்.