நான்காவது போட்டியில் கைகொடுத்த ஓப்பனிங் பாட்னர்ஷிப்... முதல் வெற்றியை பெற ராஜஸ்தானுக்கு 159 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி.

ஐபிஎல் 2019-வது சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளன. இதற்கிடையே, ஐ.பி.எல் தொடரின் 14வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிவம் துபேவுக்கு பதிலாக அக்சீப் நாத்தும், இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மனுக்கு பதிலாக நவ்தீப் சைனியும் களமிறங்குகின்றனர். இதேபோல் ஸ்டோனிஸும் இன்று களமிறங்குகிறார். அதேபோல் ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னியும், ஜெயதேவ் உனட்கட்டுக்கு பதிலாக வருண் ஆரோனும் களம் காண்கின்றனர்.

பார்த்தீவ் படேலுடன் இந்த முறை விராட் கோலி ஓப்பனிங் வீரராக களம்புகுந்தார். தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடக்க வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் இன்றைக்கு ஓரளவு கைகொடுத்தது. இந்த இணை இன்று நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. கடந்த போட்டிகளை காட்டிலும் இந்த போட்டியில் ஓரளவுக்கு ஆடினார் கேப்டன் கோலி. அவர் 23 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த டி வில்லியர்ஸ் 13 ரன்களிளும், ஹெட்மேயர் ஒரு ரணிலும் வெளியேறினர். இருப்பினும் மறுமுனையில் இருந்த பார்த்தீவ் படேலுடன் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 50 ரன்கள் இவர்களின் பாட்னர்ஷிப் சென்றது. சிறப்பாக ஆடிய பார்த்தீவ் படேல் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் ஸ்டோனிஸ் அதிரடி காட்டினார். அவரின் அதிரடி உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் இளம்வீரர் ஸ்ரேயாஸ் கோபால் தன் மேஜிக்கால் முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

More News >>