பிசிசிஐ லோகோவிற்கு மேல் இருக்கும் 3 ஸ்டார்ஸ்.... உலகக்கோப்பை வென்ற தருணம் குறித்து நெகிழும் சச்சின்
ஏப்ரல் 2, 2011 இந்த நாள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கமுடியாத நாளாகும். இந்த நாளில் தான் 2011ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வைத்து இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை கையில் ஏந்தியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை உச்சி முகர்ந்தது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
தனது நெடுநாள் கனவாக அமைந்ததை நிறைவேறிய தருணம் குறித்து பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பகிர்ந்துகொண்டார். அதில், ``ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு பிறகும் உலகக்கோப்பை தொடர் வருகிறது. இந்திய அணி கடந்த ஏப்ரல் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி உலகக்கோப்பையை வென்றபின் 8 வருடங்கள் கழித்து தற்போது விளையாட இருக்கிறோம். நமது இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், எந்த அணி சென்றாலும், அது நம்முடைய அணியாக இருக்கும்.
எனது கிரிக்கெட் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று. அன்று நடந்தது. என் கிரிக்கெட் வாழ்நாளில் சிறந்த தருணம். உலகக்கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் நானும் இருந்தேன் என்பது சந்தோஷமாக உள்ளது. நீங்கள் இந்திய அணியின் ஜெர்சியை கவனித்து இருந்தால் பிசிசிஐ லோகோவிற்கு மேல் 3 ஸ்டார்ஸ் இடம் பெற்றிருக்கும். அந்த ஸ்டார்ஸ் நாம் எத்தனை முறை உலகக்கோப்பையை வென்று இருக்கிறோம் என்பதை குறிக்கும். இதுவரை 3 ஸ்டார்ஸ் நமது ஜெர்சியில் இடம் பெற்றுள்ளது. அதனை நான்கு ஸ்டார்ஸாக மாற்ற வேண்டும். அதுவே எனது ஆசை. உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.