நம்புகிறோம் இன்னும் 10 ஆட்டங்கள் இருக்கிறது - முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல் தொடரின் 14வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாண்டது.கடந்த போட்டிகளை காட்டிலும் இந்த போட்டியில் ஓரளவுக்கு ஆடினார் கேப்டன் கோலி. அவர் 23 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த டி வில்லியர்ஸ் 13 ரன்களிளும், ஹெட்மேயர் ஒரு ரணிலும் வெளியேறினர். இருப்பினும் மறுமுனையில் இருந்த பார்த்தீவ் படேலுடன் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார்.இந்த இணை சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 50 ரன்கள் இவர்களின் பாட்னர்ஷிப் சென்றது. சிறப்பாக ஆடிய பார்த்தீவ் படேல் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் ஸ்டோனிஸ் அதிரடி காட்டினார். அவரின் அதிரடி உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் இளம்வீரர் ஸ்ரேயாஸ் கோபால் தன் மேஜிக்கால் முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் களம்புகுந்த ராஜஸ்தான் அணிக்கு ஓப்பனிங் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ரஹானே 22 ரன்கள் எடுத்து வெளியேறினாலும், மறுமுனையில் இருந்து பட்லர் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ஸ்மித் 38 ரன்களும், திரிபாதி 34 ரன்களும் எடுக்க அணி வெற்றி இலக்கை எட்டியது. இதனால் 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இந்த தொடரில் பெறும் முதல் வெற்றி இதுவாகும். ஸ்ரேயாஷ் கோபால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு பின் பேசிய கோலி, ``நாங்கள் நிறைய கேட்ச்களை தவறவிட்டுவிட்டோம். ஐபிஎல் போன்ற ஒரு போட்டியில் அணி ஒரு பெரிய துவக்கத்தை அடையவில்லை என்றால் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.
இந்த நான்கு ஆட்டங்களில், ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் எங்கள் வழியில் விளையாட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். இன்னும் 10 போட்டிகள் இருக்கிறது. இனி வரும் ஆட்டங்களில் வீரர்கள் மேட்ச் வின்னிங் ஆட்டங்களை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.