rdquoசட்டமன்றம்தான் என்னுடைய இலக்குrdquo- திவாகரனின் மகன் ஜெயானந்த் அதிரடி
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்து பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தத் தேர்தலில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடவில்லை. இதனால் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரியாமலே இருந்தது. சமீபத்தில் அந்தக் கட்சியின் நிலைப்பாடு குறித்து அதன் பொதுச் செயலாளர் திவாகரன் விளக்கினார்.
அதில், ``தேர்தலில் சீட்டுகளைப் பெற பிச்சைக்காரனைப்போல அலைகின்ற கூட்டத்தில் நாமும் சேர வேண்டுமா எனச் சிந்தித்துப் பார்த்து எடுத்த முடிவுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது. கட்சி தொடங்கி ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அதனால் 40 தொகுதிகளுக்கு மட்டும் நடைபெறப்போகிற இந்தத் தேர்தலில் இடிபடாமல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஆயிரக்கணக்கான பதவிகளை பெற நம்முடைய முதற்களம் அமையட்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது ஜெயானந்த் திவாகரன் தற்போது தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என ஒரு சிலர் வருத்தத்தில் உள்ளதாக சொன்னார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவிகிதம் போட்டியிடுவேன் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தல் தான் என்னுடைய இலக்கு" எனக் கூறியுள்ளார்.