`நான் இன்னும் ஐதராபாத் வீட்டில் தான் இருக்கிறேன் - சிறை தண்டனையில் இருந்து தற்காலிகமாக தப்பித்த மோகன்பாபு
செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன்பாபுவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விசாகப்பட்டினம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பிரபல நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் ஆந்திர பிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு தீவிர அரசியலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இதற்கிடையே, மோகன் பாபுவிற்கு சொந்தமான லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் சார்பில் சலீம் என்ற படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதாசிரியர் ஒய்.வி.எஸ்.சவுத்ரி என்பவருக்கு மோகன்பாபு ரூ.40.50 லட்சத்துக்கு கடந்த 2010ம் ஆண்டு காசோலையை வழங்கினார்.
அந்த காசோலையை பெற்றுக்கொண்ட ஒய்.வி.எஸ்.சவுத்ரி வங்கியில் செலுத்தினார். ஆனால் நடிகர் மோகன் பாபு வங்கி கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆனது. இதையடுத்து மோகன் பாபுவிடம் பல முறை சவுத்ரி பணம் குறித்து கேட்டார். ஆனால் மோகன்பாபுவிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எலமன்ச்சிலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதன்மீது நடந்த விசாரணையில் சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன் பாபுவுக்கு 1 வருட சிறை தண்டனை வழங்கி உள்ளது. ரூ.41.71 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பின் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய ஒரு மாத காலஅவகாசம் அளித்து உத்தரவை நீதிபதிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.
இதற்கிடையே சில செய்தி நிறுவனங்கள் அவரை போலீஸ் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டன. இதற்கு, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த அவர், ``சில தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகள் பரப்புவதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.