ஜெயலலிதா பாணியில்....செல்போனிலும் ஒலிக்கத் தொடங்கி விட்டது எடப்பாடியார் குரல்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் ஜெயலலிதா பேசுகிறேன்... என்று செல்போனில் பேசி தமிழக மக்களின் காதுகளை குளிர்விக்கச் செய்தார் ஜெயலலிதா. இந்த நூதன முறை பிரச்சாரம் அப்போது வெகுவாகக் கவர்ந்தது.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஜெயலலிதா இல்லாத குறையை பூர்த்தி செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஜெயலலிதா போல் தடபுடல் ஏற்பாடுகள், போலீஸ் கெடுபிடி இல்லாமல் எளிமையாக வேன் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே குறுக்கே ஆம்புலன்ஸ் வருவது, மாடுகள் வருவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
மேலும் இந்தத் தேர்தலில் வாக்காளர்களைக் கவர எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பல்வேறு பிரச்சார யுக்திகளையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது ஜெயலலிதாவின் பதிவு செய்யப்பட்ட பிரச்சார உரையாடல் அனைத்து செல்போன்களுக்கும் வந்தது. அதைப்பின்பற்றி தற்போது மக்களவைத் தேர்தலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது போன்று செல்போனில் பதிவு செய்த உரையாடல் அழைப்பு அனைவருக்கும் வருகிறது.
அந்த அழைப்பை எடுத்தால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். அதில், ‘என் அன்பான தமிழக மக்களே... நான் உங்கள் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன், தொண்டர்களின் ஊக்கத்தோடும் அம்மாவின் நல்லாட்சி . நடைபெற்று வருகிறது. ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறவும், தமிழக மக்களின் உரிமைகளை தொடர்ந்து நிலைநாட்டிடவும், தமிழகத்தின் குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்திடவும், சட்டத்தின் ஆட்சி நடந்திடவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும், அம்மாவின் மந்திர சொற்களான அமைதி, வளம், வளர்ச்சி காண வாக்களிப்பீர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு நன்றி வணக்கம்’ என்று அந்த உரையாடல் முடிகிறது.
எடப்பாடியாரின் இந்த செல்போன் உரையாடல் பதிவு அனைத்து தரப்பினருக்கும் வருகிறது. இது அதிமுக ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றால், எதிர்த்தரப்பினரோ எரிச்சலடையச் செய்துள்ளது.