10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை பலி வாங்கிய பப்ஜி விளையாட்டு
தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போனில் விளையாடப்படும் ஆன்லைன் கேமான பப்ஜி விளையாட்டு, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விளையாட்டாக மாறியுள்ளது.
பப்ஜி விளையாட்டில் அடிக்ட் ஆகிவிடும் குழந்தைகள், சாப்பாடு மற்றும் தூக்கம் இன்றி, தொடர்ந்து பல மணி நேரம் அந்த விளையாட்டிலேயே மூழ்கி விடுகின்றனர்.
சமீபத்தில், புனேவை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தொடர்ந்து பப்ஜி விளையாடியதால், அவரது முதுகு தண்டு செயலிழந்து உயிரிந்தார்.
அதனைத் தொடர்ந்து வடமாநிலங்கள் சில வற்றில் பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டும், மீறி விளையாடும் இளைஞர்களை போலீசார் கைது செய்த நடவடிக்கைகளும் நடந்தேறின.
இந்நிலையில், தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்த கள்ளக்குறி சாம்பசிவா எனும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன், பப்ஜி விளையாடியதற்காக தனது பெற்றோர்கள் திட்டியது பொறுக்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த மாணவனின் பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.