வேலூர் தனியார் கல்லூரியில் பிடிபட்ட ரூ.200 கோடி ஆளும் கட்சி பணம்...மூடி மறைக்கப்பட்டதாக பகீர் தகவல்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டில் ரூ 10 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகிக் கிடக்க, அதே வேலூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரூ 200 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்தப் பணம் ஆளும் கட்சித் தரப்புக்கு சொந்தமானது என்பதால் எங்கிருந்தோ வந்த ஒரு உத்தரவால், பணத்தை பறிமுதல் செய்யாமல், அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பினர் என்ற தகவல்கள் கசிந்து பரபரப்பாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 30-ந்தேதி துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதலான தாக கூறப்பட்டது. ஆனால் அடுத்த இரு தினங்களில் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் அர்திரடிப் படையினர் உதவியுடன் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ௹பாய்க்கும் மேலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக தனித்தனி கவர்களில் பெயர், ஊர், வாக்குச்சாவடி எண் போன்றவை குறிப்பிடப் பட்டு இருந்ததாக வெளியான தகவல்களால், அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்தாகலாம் என்றும் கூட தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் வேலூரில் உள்ள ஒரு பிரபல மூன்றெழுத்து தனியார் பொறியியல் கல்லூரியில் ரூ 200 கோடிக்கும் மேலான பணம் பதுக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்து வருமான வரி அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டள்ள நிலையில், எங்கிருந்தோ அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு வந்ததாம். இதனால் அப்படியே போட்டுவிட்டு அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பினராம். அந்த ரூ200 கோடி பணம் ஆளும் கட்சி புள்ளி ஒருவருக்கு சொந்தமானது என்பதால் ரெய்டு விவகாரத்தையே மூடிமறைத்து விட்டதாக தகவல்கள் கசிந்து பரபரத்து கிடக்கிறது வேலூர் .