ஏழை மாணவர்களும் மருத்துவராக நீட் தேர்வு அவசியம் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. அதில், ‘நீட்’ தேர்வானது சில மாநில மாணவர்களுக்கு எதிராகவும், பாகுபாடாகவும் உள்ளது.
அதுமட்டுமின்றி, மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகவும் இருக்கிறது. அதனால், நீட் தேர்வை கைவிடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்து, கன்னியாகுமரி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், கருத்து தெரிவித்துள்ள அவர், ‘நீட் தேர்வு என்பது அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஒரு பொதுவான விஷயம். பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவர்களும் மருத்துவராக வேண்டும்.
அதனால், ‘நீட்’ மிகவும் அவசியம். அரசுப் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள். கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஏழை மாணவர்களால் எப்படி மருத்துவ ‘சீட்’ வாங்க முடியும்? அதனால், ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வுதான் ஒரே வழி’ என்றார்.