உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு புதிய ஒருவருக்கு வாய்ப்பு
உலக கோப்பை தொடரில் விளையாடும் 15 வீரர்களின் பெயர் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முதல் ஆளாக இன்று வெளியிட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இறுதியில் இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலக கோப்பையை எடுத்து நடத்தும் இங்கிலாந்து அணி நேரடியாக போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் என மொத்தம் 10 அணிகள் இந்த உலகக்கோப்பையில் பங்குபெறுகின்றன.
உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை உருவாக்கும் முனைப்பில் அணிகள் இறங்கியுள்ளன. அந்த வகையில் நியூசிலாந்து அணி முதல் அணியாக தங்களின் 15 வீரர்களைக் கொண்ட உலக கோப்பை அணியை அறிவித்துள்ளது.
ஒருநாள் தரவரிசையில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, ஆறு முறை அரையிறுதிக்கும், ஒரு முறை இறுதிப்போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில், உலக கோப்பையில் பங்கு பெறும் நியூசிலாந்து அணியின், 15 வீரர்களின் கொண்ட பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் விவரம்: (கேப்டன்) கேன் வில்லியம்சன், மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், கோலின் முன்ரோ, டிம் சௌவ்தி, டிரன்ட் போல்ட், மிட்ச்சில் சான்டனர், டாம் லேதம், கோலின் டி கீராண்டோம், ஜேம்ஸ் நீஷம், ஹென்றி நிக்கோலஸ், பெர்குசன், மேட் ஹென்றி, டாம் புளுன்டெல், இஸ் ஜோதி. ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில், வெலிங்டனை சேர்ந்த கீப்பர் ப்ளெண்டெல், டாம் லாதமுக்கு மாற்று கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், இதுவரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதில்லை.