மனதுக்குள் கட்சிகளுக்கு இடம்.. ஊருக்குள் கட்சிகளுக்கு இடம் இல்லை புதுமை கிராமம்

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இதே நேரத்தில், அரசியல் ஆரவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது இரண்டு கிராமங்கள்.

கரூர் மாவட்டம் காக்காவாடி ஊராட்சிக்கு உட்பட்ட காக்குலம்பட்டி மற்றும் நாயக்கனூர் என்ற கிராமங்களில் தேர்தலின் போது வழக்கமாகப் பின்பற்றப்படும், கட்சி தோரணங்கள், சுவர்களில் கட்சி சின்னம், வேட்பாளர்களின் படங்களை வரைவது போன்ற நடைமுறைகளுக்கு அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடு, இன்று நேற்றாக பின்பற்றாமல் கடந்த 32 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது...

காக்குலம்பட்டி, நாயக்கனூரில் எம்.ஜி.ஆர் இருந்தவரை இந்த கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி, இருந்தது. தேர்தல் தேதி அறிவித்து விட்டால், கிராமம் விழா கோலமாக மாறிவிடும். ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெ.,அணி ஜானகி அணி என அதிமுக உடைந்தது. அப்போதுதான், கடைசியாகக் கட்சிக் கொடி இங்கு ஏற்றப்பட்டது.

பின், நடந்த தேர்தல்களில் கிராம மக்களிடையே கட்சி போஸ்டர்கள் ஓட்டுவது, ஒட்டிய போஸ்டர்களை கிழிப்பது என சர்ச்சைகளும், மோதல்களும் ஏற்பட்டது. இதனையடுத்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவு ஒன்றை எடுத்திருக்கின்றனர். ‘கிராம மக்களின் ஒற்றுமைக்காகக் கட்சி சாயல்கள் இனி வேண்டாம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊருக்குள் கட்சி கொடியை  ஆதரிக்காத கிராம மக்கள், ஓட்டு கேட்டு வருவோர் கட்சிக் கொடிகளுடன் வரும்போது, அதனைத் தடுப்பதில்லை. மனதுக்குள் எந்த கட்சிகளுக்கும் இடம் உண்டு என்று கூறும் கிராம மக்கள், ஊருக்குள் கட்சிகளுக்கு இடம் இல்லை என்று உறுதியாக இருக்கின்றனர். தேர்தலின்போது, கட்சி வேறுபாடு இன்றி அமைதியா நடைமுறையை கடைப்பிடிப்பது வியப்பாக உள்ளது.  

More News >>