`எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம் - கோலியை வீழ்த்திய மகிழ்ச்சியில் இளம் வீரர் ஷ்ரேயாஸ் கோபால்
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம்ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் லெக்-ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபால். இவர் சிறப்பாக பந்து வீசி விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஹெட்மையர் என பெங்களூரு அணியின் மூன்று முக்கிய தலைகளை வீழ்த்தினார். கூடவே, 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதற்கிடையே வெற்றி குறித்து ஷ்ரேயாஸ் தற்போது பேசியுள்ளார்.
அதில், ``ஒரே போட்டியில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் என பெரிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக இருக்கும். இவர்களை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம். அதேபோல் ஐபிஎல் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம் என்றால் மிகையல்ல. ஒவ்வொரு விக்கெட்டும் மிகப்பெரியதுதான். ஆனால் இவர்களை போன்ற மிகப்பெரிய வீரர்களை வீழ்த்துவது இன்னும் சிறந்தது" எனக் கூறியுள்ளார்.
ரிஸ்ட் ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபால் ஆர்.சி.பி-க்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார். 2 போட்டிகளில் 6 விக்கெட், இதில் டி வில்லியர்ஸை இருமுறை அவுட் செய்திருக்கிறார். இதன் அடிப்படையில் தான் அவரை டிரம்ப் கார்டாகப் பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளார் ரஹானே. ``ஷ்ரேயாஸ் கோபால் எப்போதுமே கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு எதிராக நன்றாக பந்துவீசி வருவது நமக்கு தெரியும். இவர்தான் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் அவுட் ஆக்குவார் என்று தெரியும். அவராலே வெற்றி கிடைத்தது" என ரஹானே தெரிவித்துள்ளார்.