`முன்பு நெருப்பு பறக்கும் இப்போது செருப்பு பறக்குது - ரைமிங்காக பேசி அதிமுகவை கலாய்த்த கமல்

கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கினாலும் தேர்தலில் பங்கேற்கவில்லை. அதேநேரம் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதலில் தன் பிரச்சார மேடைகளில் குறை நிறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார். பிறகு திமுகவை விமர்சித்து பேசினார். தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். வடசென்னை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மவுரியாவை ஆதரித்து காசிமேடு பகுதியில் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார் கமல். அப்போது, ``மக்களுக்கான ஆட்சி, மக்களுக்கான அரசியலை நோக்கி மக்கள் நீதி மய்யம் பயணிக்கிறது. தேர்தல் நேரத்தில் காசு பார்க்கலாம் என நினைக்கும் நிர்வாகிகளை, கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டேன். இந்த ஆட்சியில் நிறைய குறைகள் உள்ளன.

என்னைப் பார்த்து நான் அவ்வளவு பெரிய அரசியல்வாதி இல்லை. வெறும் நடிகர் மட்டும் தான் எனக் கூறுகிறார்கள் திமுகவினர். நேற்றுமுன்தினம் வரை ``எங்ககிட்ட ரெய்டு விடுங்க பார்ப்போம். ஒன்னும் கண்டுபிடிக்க முடியாது" அப்படினு சொன்னார் துரைமுருகன். என்னைவிட அதிகமாக குரல் கொடுப்பதை பார்த்து அவர் நேர்மையான ஆள் தான் என எண்ணினேன். ஆனால் உண்மை இப்போது தான் தெரிகிறது. என்னை விட துரைமுருகன் பெரிய நடிகராக இருக்கிறார். நேர்மையின் காரணமாக அவரைவிட பெரிய அரசியல்வாதி நாங்கள்.

முன்பு எம்ஜிஆர் பிரசாரத்திற்கு சென்றால் நெருப்பு பறக்கும். இப்போது அவர்கள் கட்சிகாரர்கள் சென்றால் செருப்பு பறக்கிறது" என ரைமிங்காக பேசினார்.

More News >>