`அனைத்துக்கும் எங்களையே எதிர்பார்க்கக்கூடாது - டிக் டாக் ஆப்பை தடை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

டிக்-டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்கிற வழக்கறிஞர் டிக் டாக் ஆப் பயன்பாட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் டிக் டாக் ஆப்க்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இதனால் சமூக சீரழிவு நடந்து வருகிறது. பல ஆபாச வீடியோக்கள் இதில் வலம் வருகின்றன. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதை பயன்படுத்துகிறார்கள். டிக்-டாக் ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. பல விபரீத சம்பவங்கள் நடக்க, இந்த ஆப் காரணமாக அமைந்துள்ளது. அதனால் டிக் டாக் ஆப்பை தடை செய்ய வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது . அப்போது பேசிய நீதிபதிகள், ``புளூவேல் உள்ளிட்ட சமூகத்துக்கு சீர் விளைவிக்கும் செயலிகளை நீதிமன்றம் தான் தலையிட்டு தடை செய்தது. தொடர்ந்து சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களை தடை விதிக்க நீதிமன்றத்தையே மத்திய அரசு எதிர்பார்க்கக்கூடாது. டிக்-டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய இந்தோனேஷியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளது. எனவே நம் நாட்டில் டிக்-டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். டிக்-டாக் செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது. குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வருகிற 16-ந்தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More News >>