இடைத்தேர்தலில் மட்டுமே அமைச்சர்கள் கவனம்....தென் மாவட்டங்களில் அம்போவான அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்

ஆட்சியைத் தக்க வைக்க 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதியையாவது வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது அதிமுக. இதனால் ஒட்டு மொத்தமாக அமைச்சர்களின் கவனம் முழுக்கவனம் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருக்க, தென் மாவட்டங்களில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் மும்முரம் காட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டே வாரங்கள் தான் என்ற அளவுக்கு நாட்கள் சுருங்கி விட்ட நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதிமுக தரப்பில் தென் மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களவைத் தொகுதிகளை தாராளமாக அள்ளிக் கொடுத்து விட்டது. அதிமுகவுக்கோ சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றி ஒன்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளையே குறி வைத்து அங்கேயே முடங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட அமைச்சரான கடம்பூர் ராஜு விளாத்திகுளத்திலும், விருதுநகர் மாவட் டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாத்தூரிலும் கவனம் செலுத்துகின்றனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மணிகண்டன் பரமக்குடி , மானாமதுரை தொகுதிகளிலும், திண்டுக்கல் சீனிவாசன் நிலக்கோட்டை தொகுதியிலும் முடங்கி விட்டனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரோ தேனியில் போட்டியிடும் ஓ.பி.எஸ் மகனை ஜெயிக்க வைக்க வேண்டும் என கங்கணம் கட்டி, அங்கேயே டேரா போட்டுவிட்டார்.

இம்முறை தென்மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் தேனி, மதுரை, நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டி யிடுகிறது. குமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரத்தில் பாஜகவும், தென்காசியில் புதிய தமிழகம், விருதுநகரில் தேமுதிக, திண்டுக்கல்லில் பாமக ஆகிய கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகள் அனைத்துமே நம்புவது அதிமுக அமைச்சர்கள் மற்றும்அக்கட்சி நிர்வாகிகளைத் தான்.

ஆனால் அதிமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஒட்டு மொத்தம் பேரும் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள், தேனி, மதுரை மற்றும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளுக்கு படையெடுத்து விட்டனர். இதனால் பாஜக, தேமுதிக, பாமக வேட்பாளர்கள் களப்பிரச்சாரத்தில் அதிமுகவினரின் போதிய தயவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக விருதுநகர் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திண்டுக்கல் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து, சிவகங்கையில் பாஜகவின் எச்.ராஜா, ராமநாபுரத்தில் பாஜக தரப்பில் நெல்லையிலிருந்து இறக்குமதியாகி இருக்கும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் நிலைமை தான் படு திண்டாட்டமாகியுள்ளது.

More News >>