ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை இல்லை - அப்பல்லோ கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம் .

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள், மருத்துவர் அல்லாத பணியாளர்கள் என பலர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முறையாக நடைபெறவில்லை. அந்த ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் யாரும் இல்லை. அவர்கள் மருத்துவ தொழில்நுட்ப ரீதியிலான சாட்சியங்களை முறையாக பதிவு செய்யவில்லை.

எனவே இந்த ஆணைய விசாரணை, அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில், அந்த ஆணையத்தில் 21 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி, ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

21மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கக்கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ஏற்கெனவே 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில் அதற்குத் தடையும் விதிக்க முடியாது.

ஆனாலும் ஆறுமுகசாமி ஆணையம் தனது வரம்புக்குட்பட்டு விசாரணையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

More News >>