இளம்பெண்ணிடம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு தொல்லை செய்த வழக்கறிஞர் கூகுள் உதவியுடன் சிக்கினார்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், இளம் பெண் ஒருவரிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு தொல்லைக் கொடுத்துள்ளார். அந்த இளம் பெண் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் கூகுளின் உதவியுடன் அந்த வழக்கறிஞரை கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான மிரட்டல்களும் வந்து கொண்டே இருக்கின்றன. பேஸ்புக்கில் புரொஃபைல் பிக்சர் வைத்தால், அதனை எடுத்து மார்பிங் செய்ய ஒரு கூட்டமே அலைகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூரைச் சேர்ந்த 25 வயது வழக்கறிஞரான சைத்தன்யா சோனி என்பவர், 16வயது இளம்பெண் மற்றும் அந்த இளம்பெண்ணின் 41வயது தாயாரிடம், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அந்த இளம்பெண்ணிடம், நட்பாக பழகி வந்த சைத்தன்யா சோனி, நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறும், இல்லாவிட்டால், குடும்பத்தையே சீரழித்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
மேலும், அந்த இளம்பெண்ணின் அம்மாவின் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து கால் செய்து அவரையும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் புகார் அளித்தனர். ஆனால், டெக்னாலஜியின் உதவியுடன், தனது ஐடி மற்றும் விவரங்களை மறைத்து வைத்து, அவன் இப்படி ஒரு மிரட்டலை விடுத்துள்ளதை அறிந்த போலீஸ் அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக கூகுளின் உதவியை நாடியுள்ளனர்.
கூகுளின் உதவியால் இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தது சோனி எனும் வழக்கறிஞர் தான் என தெரியவந்து, அவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆனால், சோனியை மீட்க 15 வழக்கறிஞர்கள் குழு நீதிமன்றத்தில் வாதாடியது.
சமூக வலைதளத்தில் அந்த பெண் நுழைந்தது தான் குற்றம் என்றும், சோனி மீது எந்தவொரு தவறும் இல்லை என அவர்கள் வாதாடினர். ஆனாலும், அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஜாமின் வழங்க மறுத்து, மும்பை போலீசார் ரிமாண்ட் செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.