நாடுதான் முக்கியம், மற்றதெல்லாம் அப்புறம்விமர்சிப்பவர்களை தேசவிரோதி என்பதா..? மவுனம் கலைத்த அத்வானி கொந்தளிப்பு
பாஜகவை ஆரம்பித்து அக்கட்சியின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு காரண கர்த்தாக்களாக திகழ்ந்த தலைவர்களில் மிக முக்கியமானவர் எல்.கே.அத்வானி ஆவார். பிரதமர் பதவி போட்டியில் முன்னிலையில் இருந்த அத்வானியை பின்னுக்குத் தள்ளி பதவியைப் பிடித்த மோடி, அத்வானியின் முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மட்டம் தட்டி கடைசியில் இந்தத் தேர்தலில் மொத்தமாக ஓரம் கட்டி விட்டார். கட்சி ஆரம்பித்து தொடர்ந்து 6 முறை எம்.பி.யாக அத்வானி வெற்றி பெற்ற குஜராத்தின் காந்திநகர் தொகுதியை அமித் ஷாவுக்கு தாரை வார்த்து விட்டார் மோடி.
இதனால் நடப்பது எல்லாவற்றையும் பார்த்து நொந்து போய் அமைதி காத்து வந்து அத்வானி இன்று தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்து, தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
பாஜக தொடங்கப்பட்ட நிறுவன நாளான ஏப்ரல் 6-ந் தேதியை முன்னிட்டு எல்.கே.அத்வானி, ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், தான் 14 வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து கடந்த 70 வருடங்களாக பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதை மிக உருக்கமாக விவரித்துள்ளார். தான் முதலில் ஜன சங்கத்தையும், அதன் பின் பாஜகவையும் ஆரம்பித்த தளகர்த்தாக்களில் ஒருவர் என்பதை நினைவு கூர்ந்ததுடன் கடந்த 1991 முதல் தொடர்ந்து 6 முறை தன்னை எம்.பி.யாக தேர்வு செய்த காந்திநகர் தொகுதி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முதலில் நாடு தான் முக்கியம். அதன் பின் தான் கட்சி மற்றும் சொந்த நலன் என்று கூறியுள்ள அத்வானி, ஜனநாயகத்தையும் , அதன் பாரம்பரியத்தையும் பேணிக் காப்பது அவசியம். தனி மனித சுதந்திரம், உணர்வுகள் பேணிக் காக்கப்பட வேண்டும். எதிர் விமர்சனங்களை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர விமர்சிப்பவர்களை எதிரியாகவோ, தேசவிரோதி என்று பட்டம் கட்டுவதோ அழகல்ல என்று பிரதமர் மோடிக்கு காட்டமாக அறிவுரையும் கூறியுள்ளார் அத்வானி. கடந்த 5 வருடங்களில் கட்சி குறித்து தமது கருத்தை இப்போது தான் முதன் முறையாக அத்வானி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
93 வயதான அத்வானி, தான் கட்சியில் முற்றிலும் ஓரம் கட்டப்பட்டதை, கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு, தன் மனக்குமுறலை, அதுவும் தேர்தல் நேரத்தில் வெளிப்படுத்தியிருப்பது, பிரதமர் மோடிக்கும், பாஜக தலைமைக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.