சொந்த மண்ணிலே டெல்லி அணி துவம்சம் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த ஐதராபாத் அணி!

ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

2019-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே அதிகபட்சமாக 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், மற்ற வீரர்கள் பெரும்பாலும் ஒற்றை இலக்க எண்களோடு பெவிலியன் திரும்பினர்.

ஐதராபாத் அணி சார்பில் கேப்டன் புவனேஷ் குமார், முகமது நபி, சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரஷித் கான் மற்றும் சந்திப் ஷர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர், 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்த களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 28 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசி 48 ரன்கள் எடுத்த நிலையில், ராகுல் திவத்தியாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார்.

ஆட்ட நேர முடிவில் யூசுப் பதான் 9 ரன்களுடனும் முகமது நபி 17 ரன்களுடனும் அவுட்டாகாமல் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இதுவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிப் பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

 

More News >>