முகத்தில் ஆசிட் வீசிடுவாங்க...எனக்குப் பாதுகாப்பு இல்லை! -பிரசார மேடையில் கதறிய ஜெயப்பிரதா
‘தன் முகத்தில் ஆசிட் வீசி விடுவார்கள் என்ற அச்சத்தினால் ராம்பூரை விட்டுச் சென்றேன்’ எனப் பிரசார மேடையில் கண்கலங்கினார் நடிகை ஜெயப்பிரதா.
உத்திர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிருக்கிறார் நடிகை ஜெயப்பிரதா. முன்னதாக, சமாஜ்வாதி கட்சியில் இணைந்திருந்த ஜெயப்பிரதா அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் பாஜக-வில் இணைந்தார். இந்த தேர்தலில் உ.பி ராம்பூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு, பிரச்சாரத்தில் பேசிய ஜெயப்பிரதா, ‘சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம் கான், குண்டர்களை ஏவி என் மீது தாக்குதலை நடத்தினார். எனது முகத்தில் ஆசிட் வீசிவிடுவார்கள் என்ற அச்சத்தினால் மட்டுமே ராம்பூரை விட்டுச் சென்றேன். இல்லையெனில், நான் ராம்பூரை விட்டுச் சென்றிருக்க மாட்டேன். இது எனது விருப்பமும் அல்ல..’ என்று பேசும்போது மேடையிலேயே கண்கலங்கி அழுதார். தொடர்ந்து பேசிய அவர், ‘தமது 67- வது பிறந்தநாள் பரிசாக, ராம்பூரை தொகுதியில் போட்டியிட பாஜக வழங்கியதற்கு நன்றி’ எனக் கூறினார்.
கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் சமாஜ்வாதி சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ஜெயப்பிரதா. தற்போது, இதே தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை எதிர்த்து பாஜக சார்பில் அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.