அதிகரிக்கும் காற்று மாசு..குறைகிறது இந்தியர்களின் ஆயுட்காலம்...எச்சரிக்கும் ரிப்போர்ட்

இந்தியாவில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இங்கு பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலத்தில் 2.5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றங்கள், போன்ற பிரச்னைகள் உலகத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. அதிகரித்து வரும் மக்கள் தொகை,  பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட  முக்கிய காரணங்களால் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த எச்ஈஐ என்ற சுகாதார அமைப்பு காற்று குறித்த ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

உலக முழுவதும் நடத்திய ஆய்வில், கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் உட்புறம் மற்றும் வெளிப்புற காற்று மாசு காரணமாக, சுமார் 50 லட்சம் பேர் மாரடைப்பு, நீரிழிவு, வெப்ப தாக்கம் உள்ளிட்ட நோய்ப் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். அதோடு, இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசியா நாடுகளில் பிறக்கும்  குழந்தைகளின் ஆயுட்காலமும் 2.5 ஆண்டுகள் குறையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை....

இந்தியர்களிடையே அதிகரித்து வரும் உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 65 –ஆக மாறிவிட்டது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா மற்றும் சீனாவில் 12 லட்சம் பேர் காற்று மாசு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதிலும், இந்தியாவில் அதிக மரணத்திற்கான காரணங்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது காற்று மாசு தான் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பருவ நிலை மாற்றத்தினால், இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் நலிவடைந்து விட்டது. இதனால், விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

2050ல் உருகும் ஆர்டிக் கடல்...

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் உலகில் அதி வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 80 நகரங்கள் மிகப்பெரிய பிரச்சைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 2050-ம் ஆண்டின் கோடைக்காலத்தில் ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

More News >>