பொதுமக்களிடம் வசூல் வேட்டை செய்யும் பறக்கும் படை? புலம்பித் தவிக்கும் சிறு குறு வியாபாரிகள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எந்தவொரு சிக்கலும் இன்றி பணப்பட்டுவாடா செய்து வருகின்றன. ஆனால், சிறு மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் மட்டுமே தங்களது கைவரிசையை பறக்கும் படையினர் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தினமும் பல கோடிகள் பறிமுதல் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.

ஆனால், அந்த பணத்தினை பட்டுவாடா செய்த கட்சியினர் மீதும், அந்த தொகுதி வேட்பாளர்கள் மீதோ இதுவரை தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் பெரியளவில் எடுத்ததாக தெரியவில்லை.

அதற்கு மாறாக பொதுமக்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் கொண்டு செல்லும், பணத்தை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை கைப்பற்றி வருவதாகவும், உரிய ரசீது இல்லாததால், அவர்களின் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வியாபாரிகளோ, சின்ன சின்ன கடைகள் மற்றும் வர்த்தகர்களிடம் கொடுக்கும் சிறிய அளவிலான தொகையை வசூல் செய்யும் போது, எப்படி ரசீது வைத்திருக்க முடியும். பெரு நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை ஆன்லைன் மூலம் செலுத்துகின்றன. ஆனால், சிறு வணிகர்களோ, கடனாக பெறும் தொகைகளை கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது மொத்தமாகவோ சேர்த்து ரொக்கமாகவே தருகின்றனர்.

இதனால், பறக்கும் படையினர் பிடிக்கும் போது, தங்களால் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றும், சிலர், உங்கள் பணம் உங்களுக்கு வேண்டுமென்றால், அதற்கு குறிப்பிட்ட பணத்தை லஞ்சமாக தரவேண்டியும் கேட்பதாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.

திருமணத்திற்கு செல்லும், பொதுமக்கள் வாகனங்களில் தங்க நகைகளை கொண்டு சென்றாலும், அதனை பறிமுதல் செய்வதாகவும், குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.

ஆனால், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் செய்யும் பணப்பட்டுவாடா மட்டும் எங்கேயும் மாட்டுவதில்லை என்றும், தேர்தல் பறக்கும்படையில் உள்ள சில அதிகாரிகளே அதற்கு உறுதுணையாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

 

More News >>