பரிசுப்பொருட்களை பகிரங்கமாக வாரி இறைத்த அதிமுகவினர் ....கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்க எவர்சில்வர் பாத்திரம், குடம் என விதவிதமான பரிசுப் பொருட்களை அதிமுகவினர் வாரி இறைத்தனர். பகிரங்கமாக நடுரோட்டில் வாகஙை்களில் வைத்து நடந்த விநியோகத்தை தேர்தல் பறக்கும் படையின் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்ததுதான் கொடுமையிலும் கொடுமை என எதிர்த்தரப்பினர் ஆவேசப்படுகின்றனர்.

தேர்தலுக்கு நாட்கள் நெருங்க, நெருங்க, தேர்தல் நடத்தை விதி மீறல்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அதுவும் ஆளும் அதிமுக தரப்பில் பகிரங்கமாகவே பணப்பட்டுவாடா, வேட்டி சேலை, விதவிதமான பரிசுப் பொருட்களை வழங்குவது என தூள் கிளப்ப ஆரம்பித்து விட்டனர். இதனை தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று திமுக தரப்பில் புகார் வாசிக்கின்றனர் .

அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் வரை தாராளமாக வழங்கப்படுகிறதாம். இது போன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதியில் இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகள் வினியோகம் தூள் பறக்கிறதாம்.

இந்நிலையில் நேற்று நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரத்திற்கு சென்றார். கூடலூரில் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்ட, எவர்சில்வர் குடம், பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை அதிமுகவினர் வாரி இறைத்தனர். பகிரங்கமாக சாலையில் வாகனங்களில் கொண்டு வந்து பரிசுப் பொருட்களை வாரி வழங்க, இதனைப் பெற பொது மக்களும் அடித்துப் பிடித்து ஓடினர். இதையெல்லாம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளோ, காவல் துறையினரோ கொஞ்சமும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை என்று திமுக தரப்பில் புகார் வாசிக்கப்படுகிறது.

திமுக தரப்பினரை கண்கொத்திப் பாம்பாக உற்று நோக்கும் தேர்தல் அதிகாரிகள், ஆளும் தரப்பினர் செய்யும் அத்துமீறல்களை சிறிதும் கண்டுகொள்வதில்லை. இது போன்று தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது என்று திமுக தரப்பில் கொந்தளிக்கின்றனர்.

More News >>