இடைத்தேர்தல் ..அதிமுகவைவிட அமமுகவுக்கு கூடுதல் சீட் கிடைக்குமா..?- எடப்பாடி ஆட்சி என்னாகும்
18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலின் முடிவுகள் தமிழக அரசியலிலும், ஆட்சியிலும் மிகப் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சட்டப் பேரவையில் அதிமுகவின் பலம் 113 ஆக உள்ளது. இதில் இதில் அதிமுக சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேரும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோரும் அடங்குவர். இந்த 5 பேரில் தனியரசு தவிர 4 பேரும் எடப்பாடி அரசு மீது அதிருப்தியில் உள்ளதால் அதிமுக பலம் 113 -ல் இருந்து 109 ஆக குறைந்துள்ளது. திமுக உறுப்பினர்கள் 88 பேருடன் காங்கிரசில் 8 பேரும், முஸ்லீம் லீக் உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக உள்ளதால் திமுக தரப்பில் 97 பேர் உள்ளனர்.
தற்போதைய நிலையில் 22 காலியிடங்கள் போக மொத்தமுள்ள 212 பேரில் அதிமுகவுக்கு நூலிழையில் பெரும்பான்மை உள்ளது. ஆனால் நடை பெற உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 7 இடங்களில் வென்றால் மட்டுமே எடப்பாடி அரசு பெரும்பான்மையுடன் நீடிக்க முடியும். திமுகவோ 18-ல் 16 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதெல்லாம் நடக்காமல், தினகரனின் அமமுக தரப்பில் நான்கைந்து பேர் வெற்றி பெற்று, அதிமுக 2 அல்லது 3 தொகுதிகளில் மட்டுமே வென்றால் எடப்பாடி ஆட்சி என்னவாகும் என்ற விவாதங்கள் இப்போதே சூடு பறக்கத் தொடங்கி விட்டது.
அதாவது, ஐந்து அல்லது 6 எம்எல்ஏக்கள் அமமுக தரப்பில் இருக்கும் பட்சத்தில் ஆட்சியை முடிவு செய்யும் துருப்புச் சீட்டாக தினகரன் மாறுவார். திமுக பக்கம் தினகரன் ஆதரவளித்தால் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து திமுக ஜம்மென்று ஆட்சிக் கட்டிலில் அமரவும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால் தற்போது ஆட்சியில் பதவி சுகம் கண்ட அதிமுக அமைச்சர்களில் பலரும், தினகரனே சரணம் என்று அவருடைய காலில் விழுந்து கட்சியையும், ஆட்சியையும் நீங்களே வழி நடத்துங்கள் என்று சரணாகதி அடைந்தாலும் ஆச்சர்யப்படப் போவதில்லை என்கின்றனர் அரசியலை உற்று நோக்கும் விமர்சகர்கள்.
இதற்கு உதாரணமாக 1987-ல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக (ஜா), அதிமுக (ஜெ) என இரு அணிகளாகப் பிரிந்ததை எடுத்துக் காட்டுகின்றனர். அப்போது ஜானகியின் பின்னால் அதிமுக முக்கியத் தலைவர்களும், எம்எல்ஏக்களில் பெரும்பான்மையினரும் அணிவகுத்து ஜானகியை முதல்வராக்கினர். வெறும் 26 எம்எல்ஏக்களுடன் தனி அணியாக செயல்பட்ட ஜெயலலிதா, மத்தியில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு நெருக்கடி கொடுத்து ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்தார். பின்னர் நடந்த தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஜானகி தலைமையிலான அதிமுக மோசமான தோல்வியைத் தழுவியது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 27 இடங்களில் வென்றதுடன் போட்டியிட்டதொகுதிகள் அனைத்திலும் கணிசமான வாக்குகளைப் பெற்று உண்மையான அதிமுக தன் பக்கம் என ஜெயலலிதா நிரூபிக்க, அவர் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றானது.
அது போன்ற நிலைமை இந்தத் தேர்தலுக்கு பின் உருவாகும். தன் பின்னால் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என்பதை தினகரன் நிரூபித்துக் காட்டுவார். ஆட்சியும், கட்சியும் தினகரன் கைவசம் வரும் என்று அடித்துக் கூறி வருகின்றனர் அமமுகவினர் .