கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள்
மக்களவை தேர்தலில் கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெரும், பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்ய வாய்ப்புகள் அதிகம் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கேரளாவில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டும் காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரத் தர்ம ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. இதனால், கேரளா தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில், மலையாள மனோரமா பத்திரிக்கை, கார்வி நிறுவனத்துடன் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. அதன், முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களில் அமோகமாக வெற்றி பெரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணி 4 இடங்களைக் கைப்பற்றும். சபரிமலை விவகாரம் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கேரளா அரசியலில், இதுவரை மக்களவை தேர்தலில் வெற்றி பெறாத பாஜக, இந்த தேர்தலில் தனது வெற்றியைப் பதிவு செய்யும் வாய்ப்பு அதிகம். திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி போட்டியிடும் அறிவிப்பு வெளியிடும் முன்பு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.