வாக்குச்சாவடியில் நாம் மட்டும்தான் இருப்போம் புரிகிறதா அன்புமணியின் சர்ச்சை பேச்சு, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடியில் நாம் மட்டும்தான் இருப்போம் எனப் அன்புமணி ராமதாஸ் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் தமிழக அரசியல் தலைவர்கள். இந்நிலையில், திருப்போரூரில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார் பாமகவின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். பிரசாரத்தில், அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தவே, தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.
பிரசாரத்தில் பேசிய அன்புமணி, தமிழகத்தில் நமது கூட்டணிக்குத்தான் வாக்கு வங்கி அதிகம். தேர்தலில் என்ன நடக்கும்..? சரி, பூத்ல என்ன நடக்கும், நம்மதான் இருப்போம் 'பூத்ல..' சொல்கிறது புரிகிறதா..? இல்லையா..? நம்மதான் இருப்போம்...நம்ம மட்டும்தான் இருப்போம்...அப்புறம் என்ன? செல்லுமா வெளியில்... புரிகிறதா...அவ்வளவுதான் என்று பேசினார்.
அன்புமணியின் இந்த பேச்சு, வாக்காளர்களிடம் கள்ள ஓட்டு போடத் தூண்டும் வகையில் இருக்கிறது என திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.