சமீபத்தில் வெளியான படங்களிலேயே `நட்பே துணை தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா

மக்கள் அனைவரும் பரப்பரப்பான வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்து பேசக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வார இறுதி நாள்களை குடும்பமாக அவுட்டிங் சென்று நேரம் செலவிடுகின்றனர். சினிமா, பீச், கோவில், ஷாப்பிங் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை கூட்டி சென்று வாரம் முழுவதும் வேலை பார்த்த மூளைகளுக்கு சற்று இளைப்பாறுதல் கொடுக்கின்றனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் என்றாலே கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. காரணம் திரைப்படங்களில் அதிகபடியாக காட்டும் வன்முறை, ஆபாசம் போன்ற விஷயங்கள். இரட்டை பொருள் தரும் வசனங்கள், வன்முறையை அதிகரிக்கும் வசனங்கள் என ட்ரெண்டுக்கு ஏற்ப திரைப்படங்களை உருவாக்குகின்றனர். ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே குழந்தைகளுக்கானதாக இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்து சென்று படம் பார்க்கவே முடியாதா என்று கேட்கிறீர்களா? வருடத்துக்கு மிகவும் சொச்சமான படங்கள் மட்டுமே குடும்பத்துடன் பார்க்கும்படி இருக்கும். அந்த சமயத்தில் தவற விடாமல் குடும்பத்தை சினிமாவுக்கு அழைத்து செல்லுங்கள்.

இந்த வருடத்தை எடுத்து கொண்டால் விஸ்வாசம், நட்பே துணை இது இரண்டை தவிர குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் எதுவுமே வரவில்லை. விஸ்வாசம் படத்திலும் பழித்தீர்க்கும் படலம், சண்டை காட்சிகள் நிறைந்திருக்கும். ஐரா-வும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஜாலியான படமாக இல்லை. `நட்பே துணை’ இவற்றுக்கு விதிவிலக்கு.

`நட்பே துணை’ திரைப்படத்தில் அதிக ஆபாசம், வன்முறை இல்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டும் கலவரத்தை காட்டியிருப்பார்கள். படத்தின் நாயகன் ஹிப் ஹாப் ஆதி படம் முழுவதும் கூலாக இருப்பார். நண்பர்களின் முக்கியத்துவத்தை எளிமையாக ரசிகர்களுக்கு கடத்தியிருப்பார் இயக்குநர்.

இந்த படத்தில் மற்றொரு சிறப்பான விஷயம் ஸ்போர்ட்மேன்ஷிப் (Sportsmanship). குழந்தைகள் வளர்த்து கொள்ள வேண்டிய முக்கிய குணாம்சம். இந்த படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் விளையாட்டை சார்ந்தது தான். விளையாட்டு என்றால் கிரிக்கெட் கிடையாது, ஹாக்கி.  நம் தேசிய விளையாட்டு. படத்தை பார்க்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஹாக்கி விளையாடும் ஆர்வம் தொற்றிக் கொள்ளும். குழு மனப்பான்மை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்ற சின்ன சின்ன விஷயங்களை படத்தில் ஆங்காங்கே அள்ளி தெளித்திருக்கிறார் இயக்குநர். எனவே இது 95% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், பல நல்ல விஷயங்கள் அவற்றை சமன் செய்துவிடுகின்றன. இந்த வீக் எண்ட்டில் கண்டிப்பாக குடும்பத்துடன் போய் `நட்பே துணை’ பார்க்கவும்!     

More News >>