தினேஷ் கார்த்திக்கின் ஐடியா... எனது பவர்.... கேகேஆர் வெற்றி குறித்து சிலாகிக்கும் ரஸ்ஸல்
பெங்களூரு அணியை துவம்சமாக்கி நான்கே ஓவர்களில் அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார் காட்டடி ரஸ்ஸல். கடைசி கட்டத்தில் இறங்கிய இவர் பெங்களூர் பவுலர்கள் வீசிய பந்துகளில் வானவேடிக்கை நிகழ்த்தினார். அவரை வெளியேற்ற முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர். வீசிய பந்துகளையெல்லாம் சிக்ஸராக மாற்றிய அவர், 5 பந்துகள் மீதமிருந்த போதே மேட்சை முடித்துக்கொடுத்தார். 13 பந்துகளில் 7 சிக்ஸர்களை அடித்து 48 ரன்களைச் சேர்ந்து மிரட்டினார். அவரது இந்த ஆட்டத்தால் கொல்கத்தாவின் வெற்றி இலகுவானது. இவரின் அதிரடி பேட்டிங் வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதற்கிடையே வெற்றி குறித்து ரஸ்ஸல் பேசியுள்ளார். அதில், ``நான் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போதே நம்பிக்கையுடன் தான் சென்றேன். மைதானம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முதலில் சில பந்துகளை கவனிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் சொல்லியிருந்தார். அவர் சொன்னதை போலவே பேட்டிங் செய்யும் முன் கவனித்தேன். அது நியாயமான யோசனையாக எனக்கு உதவும்விதமாக இருந்தது. 20 பந்துகளில் 68 ரன்கள் டார்கெட் என்பது எல்லா நாட்களும் அமையாது. ஒரு ஓவரில் ஆட்டத்தின் தன்மை மாறக்கூடியது தான் டி20 போட்டி. இதனை மனதில் கொண்டு எனது உடலை தயார்படுத்தி கொண்டேன். ரன்கள் அதிகமாக இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு போராட வேண்டும் எனக் கூறி கொண்டே பேட்டிங் செய்தேன்.
இறுதியில் ஐந்து பந்துகள் மீதமிருந்த நிலையில் நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம். சக வீரர் நான் விளையாடுவதற்கான போதிய இடைவெளியை ஏற்படுத்தி கொடுத்தனர். அது நல்ல வாய்ப்பாக அமைந்தது. எந்த மைதானமும் என்னை விட பெரிதாக இருக்க முடியாது என நினைக்கிறேன். என்னுடைய சக்தி என்ன என்பதை நான் அறிவேன். அதனை அதிகமாக நம்புகிறேன். பெரிய ஷாட்களை அடிப்பதற்கு கண்கள் மற்றும் கைகளின் ஒருங்கிணைப்பு முக்கியம். இதனை அதிகமாக விளக்க முடியாது. களத்தில் நிற்கும்போது இதனை அதிகமாக உணரலாம்" எனக் கூறினார்.