நாளை மறுநாள் பாஜக தேர்தல் அறிக்கை - காங்கிரசுக்கு போட்டியாக ஏராளமான வாக்குறுதிகள் இடம் பெறுகிறது

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு போட்டியாக கவர்ச்சி வாக்குறுதிகளை பாஜகவும் வாரி வழங்கும் என்று தெரிகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, குறைந்த பட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தல், 5 கோடி குடும்பங்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் வழங்குவது, நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக அதிகரிப்பது போன்றவற்றை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் ஆளும் பாஜகவோ இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இழுத்தடித்து வந்த நிலையில் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

வளர்ச்சி, தேசியவாதம், இந்துத்துவா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது.

வருகிற திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ள தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புக்கான தனி அமைச்சகம், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், தீவிரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற நிலை, வலிமையான இந்தியா போன்ற அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

அயோத்தி, காசி, மதுரா ஆகிய புண்ணிய தலங்களுக்கான தனி பகுதியை உருவாக்குவது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மக்கள் விருப்பப்படி ராமர் கோவிலை கட்டுவது, கங்கையுடன் நாட்டின் முக்கிய நதிகளை இணைப்பது போன்ற திட்டங்களும் இடம்பெறுவதுடன்,காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சிகர அறிவிப்புகளையும் பாஜக தரப்பில் வாக்குறுதிகளாக வாரி இறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>