2018-2019ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்
புதுடெல்லி: 2018-2019ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 29ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.சிந்தாமன் வங்கா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு, காலை 11.04 மணிக்கு 2018-2019ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அத்துடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைத்து தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்றும் தேர்தலுக்கு பிறகே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதனால், தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாக கருதப்படுகிறது.மேலும், ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டும் இதுதான்.
கூட்டத்தின்போது, அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வலிமை அடைந்திருக்கிறது என்றும் விரைவில் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் எனவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.