40 கோடி செலவழித்து தோற்கடிக்க பார்க்கின்றனர் - பாஜக மீது குற்றம் சாட்டும் திருமாவளவன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் களம் கண்டுள்ளார். கடந்த ஒரு வாரமாகச் சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பொதுமக்களை சந்தித்தும் வாக்கு சேகரித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற திருமாவளவன் நடராஜரை தரிசனம் செய்ததுடன், அங்கிருந்த தீட்சிதர்களிடம் சிறிது நேரம் பேசி அவர்களிடம் வாக்கு கேட்டார். தரிசனத்தின் போது நெற்றி நிறைய விபூதி பூசியிருந்தார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்தப் புகைப்படத்தை வைத்து அன்று - இன்று என கார்ட்டூன் புகைப்படம் போட்டு திருமாவளவனை விமர்சித்திருந்தது தமிழக பாஜக. தொடர்ந்து திருமாவளவன் மீது விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறது. இதுகுறித்து தற்போது திருமாவளவன் பேசியுள்ளார். அதில், ``விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் நாடளுமன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று பாஜகவினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வும், பாஜகவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அதற்கு காரணம் நான் பாஜக, அ.தி.மு.க. மதவாதம் ஆகியவற்றை எதிர்த்து பேசுவதுதான். ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுவதாலும் எதையும் கண்டித்து பேசுவதாலும் ஆத்திரத்தில் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கி உள்ளனர்'" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

More News >>