சமூக வலைதளங்களின் அக்கப்போருக்கு ஆப்படிக்க சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க அரசு திட்டம்
சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி வருகிறது. அதில், பரவும் ஃபேக் நியூஸ் எனப்படும் போலி செய்திகள் மற்றும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை யார் செய்கின்றனர் என்பது கண்டுபுடிக்காத வகையில் ஃபேக் ஐடிக்கள் அட்டகாசம் சமூக வலைதளத்தில் உலாவி வருகின்றன.
இதனை கட்டுப்படுத்த ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பலமுறை அரசு சார்பில் ஆணை பிறப்பித்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாததே உண்மை நிலையாக இருக்கின்றது.
இதனால், சமூக வலைதளங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆதார், மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் சமூக வலைதள கணக்கை பயனர்கள் இணைக்கும் திட்டத்தை அரசு விரைவில் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசின் இந்த திட்டம் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் என்ற எதிர்ப்புகளை சமாளிக்கவும் அரசின் சார்பில் புதிய யுக்திகள் கையாளப்பட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான அரசாணையை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சமூக வலைதளங்களில் உண்மையான ஒரு செய்தி எந்தளவுக்கு வேகமாக பரவுகிறதோ அதை விட பொய்யான செய்தி மற்றும் வதந்திகள் அதைவிட வேகமாக பரவி வருகின்றன.
மேலும், சமூக வலைதளங்களை தணிக்கை செய்ய முடியாத சூழலில் தீவிரவாத வீடியோக்கள், கொலை மற்றும் தற்கொலை வீடியோக்களும் லைவ் ஸ்ட்ரீமிங்கிலே காண்பிக்கப்படுகின்றன.
அண்மையில் நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிக்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த தீவிரவாதி ஃபேஸ்புக் லைவில் அதனை ஸ்ட்ரீமிங் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அனைத்து கட்சியினரும் சமூக வலைதளங்களையும் தங்களது பிரசார ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அதனை பயன்படுத்தி தவறான செய்திகளையும் விஷமிகள் எளிதில் பரப்புகின்றனர். இவ்வாறு பல காரணங்களை அரசு தரப்பில் அடுக்கி சொல்லப்படுகிறது.
வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆதாருடன் இணைந்தது போல சமூக வலைதள கணக்குகளையும் அரசு இணைக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.
ஆதார் தகவல்கள் கசிந்தது போல சமூக வலைதள கணக்குகளும் கசியத் துவங்கினால், தனி மனித சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது இங்கே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.