இது எங்க ஏரியா உள்ளே வராத.. சேப்பாக்கத்தில் பஞ்சாபை பஞ்சராக்கிய சென்னை அணி!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் 18வது லீக் மேட்ச் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். டூப்ளெஸ்சில் அரை சதத்தால் சென்னை அணி 20வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என களமிறங்கிய பஞ்சாப் அணியில், அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 5 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து குகலஜின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 55 ரன்னில் அவுட்டானார்.

மயன்க் அகர்வால் டக் அவுட்டான நிலையில், சர்ப்ராஸ் கான் நிதானமாக விளையாடி 67 ரன்களை குவித்தார். அவரும் குகலஜின் பந்துவீச்சில் டூப்ளெச்சிஸ் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 138 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி 8 புள்ளிகளுடன் மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 4-ம் இடத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்காட் குகலஜின் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

More News >>