6 விக்கெட்டுகள் வீழ்த்திய மும்பை பவுலர் 40 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் தோல்வி
ஐபிஎல் போட்டியின் 19வது லீக் ஆட்டம் நேற்று ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா(11), குயிண்டன் டி காக்(19) சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து அவுட்டாகினர். ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி திணறிய நிலையில், அந்த அணிக்கு ஆபத்பாந்தவனாக வந்த பொல்லார்டு 26 பந்துகளில் 4 சிக்ஸர் 2 பவுண்டரிகள் என அதிரடி காட்டி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் விளாசினார்.
இதனால், 20வது ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐதராபாத் அணி பந்து வீச்சாளர்களில் சித்தார்த் கவுல் மட்டும் விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் புவனேஷ்குமார், சந்திப் சர்மா, முகமது நபி மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
எளிதான இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு மும்பை பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் பேரிடியாக மாறினார். 3.4 ஓவர்கள் வீசிய அவர், 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியை வெற்றியடைய செய்தார்.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா மட்டுமே 20 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 17.4 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதனால், குறைவாக ஸ்கோர் செய்த போதிலும், மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
6 விக்கெட்டுகளை வீழ்த்திய அல்ஜாரி ஜோசப் ஆட்டநாயகனாக தேர்வானார்.