காலி சேர்களை படம் பிடித்ததால் ஆத்திரம் - விகடன் போட்டோகிராபர் மீது காங்கிரசார் கொலை வெறி தாக்குதல்

விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில், கூட்டமே இல்லாமல் காலியாக இருந்த சேர்களை படம் பிடித்த விகடன் போட்டோகிராபரை, காங்கிரசார் ரவுடித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பத்திரிகையாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை அக் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று மதுரையில் வெளியிட்டார். பின்னர் மாலையில் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் விருதுநகரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.இதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பொதுக் கூட்ட நிகழ்ச்சியை பத்திரிகை, டிவி செய்தியாளர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். கூட்டம் முடியும் முன்னரே கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இதனால் சேர்கள் அனைத்தும் காலியாகி பொதுக் கூட்டம் நடந்த இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தக் காட்சிகளை விகடன் போட்டோகிராபர் முத்துராஜ் என்பவர் தனது காமிராவில் படம் பிடித்து நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். இதனை ரொம்ப நேரமாகவே உற்று நோக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5, 6 பேர் ஆத்திரம் அடைந்தனர்.திடீரென தலையில் துண்டை முகமூடி போல் கட்டிக் கொண்டு, போட்டோகிராபர் முத்துராஜ் மீது பாய்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். ரவுடித்தனமான தாக்குதலால், கேமரா உடைந்து, உடலில் காயம் பட்டு நிலை குலைந்த விகடன் போட்டோகிராபர் முத்துராஜ் அபயக்குரல் எழுப்பினர்.

அருகிலிருந்த பிற செய்தியாளர்கள் ஒன்று திரண்டு போட்டோகிராபர் முத்துராஜை காப்பாற்ற முயன்ற போது, தாக்குதல் நடத்திய கும்பல் நைசாக தப்பி ஓடிவிட்டது. காயமடைந்த முத்துராஜை மற்ற செய்தியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் விருதுநகர் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் விகடன் போட்டோகிராபர் மீது அக்கட்சியினர் ரவுடிகள் போல் நடத்திய கொலை வெறித் தாக்குதல் சம்பவம் பத்திரிகையாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

More News >>