தேசிய தலைவர்களின் கவனம் ஈர்த்த தமிழகம் - மோடி, ராகுல் போட்டி போட்டு பிரசாரம்
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற நினைக்கும், பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தேனியில் போட்டிப் போட்டு பிரசாரம் செய்ய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத் இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற, பாஜகவும் காங்கிரஸும் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் தேசிய தலைவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது தமிழகம்.
இதனை உறுதிப் படுத்தும் விதமாக, கேரளா வயநாட்டில் முதல் முறையாகப் போட்டியிடும் ராகுல் காந்தி, தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தமிழகத்தில் சென்னை, நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தேனியில் வரும் 12ம் தேதி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ராகுல், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அதேபோல், பாஜகவும் தமிழகத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் எதிரொலியாகத் தேர்தலுக்கு முன்பே சென்னை, திருப்பூர் மதுரை என அடுத்தடுத்து நான்கு முறை தமிழகத்து வந்து பிரசார பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்றார். இதற்கடுத்து, 9ம் தேதி தமிழகம் வரவுள்ள அவர், கோவையில் போட்டியிடம் பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி வந்து சென்ற மறுநாளே தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தேசிய தலைவர்கள் மோடியும், ராகுலும் ஒரு நாள் இடைவேளையில் அடுத்து அடுத்து பிரசாரம் மேற்கொள்வது தேனி வாக்காளர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.