பிரியாணி விருந்து: முதல் பந்தியில் அமர...காங்கிரஸ் கூட்டத்தில் அடிதடி
காங்கிரஸ் தேர்தல் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி விருந்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், 7 பேர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பிஜ்னோர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நசிமுதீன் சித்திக் போட்டியிடுகிறார். முன்னதாக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்த நசிமுதீன், அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார்.
பிஜ்னோர் தொகுதியில் போட்டியிடும் நசிமுதீனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. மவுலானா ஜமீல் என்பவரது வீட்டில் இத தேர்தல் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு கலந்து கொண்ட அனைவருக்கும் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், முதலில் யார் கலந்து கொள்வது என்பதில் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். பிரியாணி மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர். அதோடு, காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த தேர்தல் கூட்டத்துக்கு முறையான அனுமதி கேட்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.