ஒருதலை காதல்.. சைக்கோ கொலையில் முடிந்தது பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை
கோவை கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ் குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம், நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி பிரகதி. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகள். அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், இவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டி வாய்கால்மேடு பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிரகதியின் சடலம் அரை நிர்வாண நிலையில் கிடந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலத்தைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரகதியின் உடலில், பல இடங்களில் கத்திக்குத்தும், விரல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தது. 4, தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர்.
தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீஸார், பிரகதியின் செல்போன் சிக்னல், கல்லூரியைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சதீஷ் என்ற இளைஞருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர், பிரகதியின் தூரத்து உறவினர் என்பதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக சதீஷிடம் நடத்திய விசாரணையில், சிறுவயதில் இருந்தே பிரகதியை ஒரு தலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது.
பிரகதி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, அவரை பெண் கேட்டுச் சென்றுள்ளார் சதீஷ். பள்ளிப்படிப்பு முடியாததால் அவரை திருமணம் செய்துதரப் பெற்றோர் மறுத்து விட்டனர். இந்நிலையில், சதீஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருப்பினும், பிரகதியின் மீது கொண்ட தீரா காதலால் திருமணம் முடிந்தும், பெண்கேட்டு பிரகதியின் வீட்டிற்கு சென்றுள்ளார் சதீஷ்.
இந்நிலையில், பிரகதிக்கு திருணம் நிச்சயக்கப்பட்டது. இதை அறிந்த சதீஷ், தனக்குக் கிடைக்காகப் பிரகதி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கில், அவரை கடத்திச்சென்று கொடூரமாகக் கொலை செய்துள்ளார்’ என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இதனிடையே, பிரகதியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரகதியின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் உறவினர்கள்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் மறைவதற்குள், 7 வயது சிறுமி பலாத்கார கொலை, கல்லூரி மாணவி சித்திரவதை கொலை உள்ளிட்ட அத்துமிரர்களால் கோவை மக்களிடம் அச்சம் உருவாகியுள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாவட்டமாகக் கோவை மாறிவருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.