`நீங்க தான் இந்த போஸ்ட் போட்டதா? - வீட்டுக்கே வந்த பேஸ்புக் அதிகாரிகள் அதிர்ந்த வாலிபர்

ஃபேஸ்புக், ட்விட்டர் என உலக இணைய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிகளவில் பகிரப்படும் வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பதெனத் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. மக்களவைத் தேர்தலும் விரைவில் நடக்கவுள்ளதால் அரசியல் ரீதியாக மாற்றங்கள் உண்டாக்க, வெறுப்புணர்வைப் பரப்ப இந்தத் தளங்கள் பயன்படுத்தப்படும் என அஞ்சப்படுகிறது. இதைத் தடுக்கவேண்டும் என அரசு, வலைதளங்கள் என அனைவரின் சார்பிலும் வேலைகள் நடந்துவருகின்றன. குறிப்பாக பேஸ்புக் மூலமாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ள அரசியல் கட்சிகள், தங்களது பெருமையை பரப்பியும் விளம்பரம் செய்கின்றனர். இதனால், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கிறது. ஏற்கனவே, அமெரிக்காவில் தேர்தலில் பேஸ்புக் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அந்நிறுவனம் மீது விமர்சனங்கள் ஏற்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசியல் கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் எழுதிவந்த டெல்லி நபரை பேஸ்புக் அதிகாரிகள் வீட்டிற்கே விசாரிக்க வந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுதொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், ``பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக போலீசார் வருவது போல, வீட்டுக்குள் வந்த பேஸ்புக் அதிகாரிகள் அந்த பதிவை எழுதியது நீங்கள்தானா? என்று கேள்விகளால் குடைந்தனர். மேலும், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை கேட்டனர். நான் காண்பித்த பின்பு சோதனைகளை முடித்துக்கொண்டு சென்றனர். முதலில் அவர்களை நான் நம்பவில்லை. பின்னர் விளக்கி சொன்ன பிறகு தான் நான் அவர்களை நம்பினேன்" எனக் கூறியுள்ளார். இந்த விசாரணைக்கு பேஸ்புக் தரப்பு மீது ஒரு சாரார் எதிர்ப்பும், ஒரு சாரார் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

More News >>