உங்களை நினைத்து பெருமை.. ஆனால் ஒரு ரெக்வொஸ்ட்.. - சென்னை ரசிகர்களை நெகிழ வைத்த ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளார் நட்சத்திர வீரர் ரெய்னா.
ஐபிஎல் 18வது லீக் மேட்ச் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி 8 புள்ளிகளுடன் மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டிக்கு பின் மைதானத்தில் இரண்டு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. ஒன்று தாஹீர் மற்றும் வாட்சன் ஆகியோரின் குழந்தைகளுடன் கேப்டன் தோனி ஓடி விளையாடியது. இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வைரலானது. இதேபோல் இன்னொரு நெகிழவைக்கும் சம்பவமும் நடந்துள்ளது.
போட்டியின் போது ரசிகர்கள் திரண்டதால் மைதானம் நிரம்பி வழிந்தது. இதனால் குப்பைகளும் நிறைய சேர்ந்தன. போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் ஃபேன்ஸ் கிளப்பான விசில் போடு ஆர்மி இந்த குப்பைகளை கண்டு வருத்தமடைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த குப்பைகளை ஒரே இடத்தில் சேர்த்து அதனை அகற்றியிருக்கிறார்கள். மேலும் இதனை புகைப்படமாகவும் எடுத்து பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நட்சத்திர வீரர் ரெய்னா அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ``தூய்மை பிரச்சாரத்தில் சென்னையின் விசில் போடு ஆர்மி கலந்துகொண்டதை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது. நேற்றைய போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்த 10 கிலோவுக்கும் அதிகமான குப்பைகளை இவர்கள் அகற்றியிருக்கிறார்கள்" என்று பெருமையாக குறிப்பிட்ட அவர், ``நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நீங்களும் நினைக்கிறீர்களா?. #DontBeMeanKeepItClean என்ற ஹேஷ்டேக்கில் அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுங்கள்" என்று ஒரு ரெக்வொஸ்ட் ஒன்றையும் வைத்துள்ளார்.