ஆடு பகை குட்டி உறவா?... அத்வானி மகளை அரசியல் களத்தில் இறக்க முயற்சிக்கும் பா.ஜ....

மூத்த தலைவர் அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத பா.ஜ. தலைமை அவரது மகள் பிரதீபாவை தேர்தலில் போட்டியிடமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பா.ஜ. கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானிக்கு தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட அந்த கட்சியின் தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடையாது என்று கொள்கையை பா.ஜ. தலைமை எடுத்துள்ளது. இதனால்தான் அத்வானி உள்ளிட்ட அந்த கட்சியின் முரளி மனோகர் ஜோஷி உள்பட்ட பல வயதான மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்கவில்லை.

இந்நிலையில், எல்.கே.அத்வானி மகள் பிரதீபாவை தேர்தலில் போட்டியிடுமாறு பா.ஜ. கட்சி அழைப்பு விடுத்துள்ளது. என்னடா அப்பாவுக்கு சீட் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டு மகளை கூப்பிடுதாங்கன்னு அதுக்கு ஒரு காரணம் இருக்கு.

மத்திய பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளாக போபால் மக்களவை தொகுதி பா.ஜ. வசம்தான் இருக்கிறது. இந்த முறை அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான திக் விஜயசிங் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் உள்ள 3.50 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களின் ஒரு பகுதியினர் அவருக்கு ஓட்டு போட அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் திக்விஜயசிங் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதேசமயம், முஸ்லிம் ஒட்டுக்களை இழந்தாலும், சிந்தி சமுதாய மக்களின் வாக்குகளை பெற்றால் ஜெயித்து விடலாம் என்று பா.ஜ. கணக்கு போடுகிறது. அதனால் அந்த சமுதாயத்தை சேர்ந்த அத்வானி மகள் பிரதீபாவை அந்த தொகுதியில் வேட்பாளராக களம் இறக்க பா.ஜ. முடிவு செய்துள்ளது. பிரதீபா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார். மேலும், பல நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அத்வானி மகள் என்ற அறிமுகம், மற்றும் தொகுதியில் மக்கள் அனைவரும் அறிந்த முகம் என்பதால் பிரதீபாவை அந்த தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக நிறுத்த அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், பிரதீபா இது குறித்து எந்தவித முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.

More News >>