போர் வெறியை தூண்டுவதே நோக்கம்- பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி......

இந்தியா தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்ற பாகிஸ்தானின் குற்றஞ்சாட்டு பொறுப்பற்றது மற்றும் அபத்தமானது. மேலும் பாகிஸ்தான் போர் வெறியை தூண்டுகிறது என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வேனை மோத செய்து வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக அதேமாதம் 26ம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பாலக்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய தீவிரவாத முகாம் உள்பட 3 முகாம்களை குண்டுகள் வீசி தாக்கி அழித்தது.

அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்திய ராணுவ முகாம்களை தாக்கும் எண்ணத்தில் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. ஆனால் இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டி அடித்தன. அதன் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தணிந்தது. இந்நிலையில், வரும் 16 முதல் 18ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஷா முகமது குரேஷி புதுக்கதையை கூறி வருகிறார்.

ஆனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் புகாரை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் குற்றஞ்சாட்டு பொறுப்பற்றது மற்றும் அபத்தமானது. போர் வெறியை தூண்டும் நோக்கில் அப்படி பேசப்பட்டுள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி அவர்கள் நடத்தும் தாக்குதலுக்கு பொய்யான ஆதாரங்களை உருவாக்கும் நோக்கில் இது போன்ற செய்திகளை உருவாக்குகின்றனர். ஆனால் அது ஒருபோதும் வெற்றி பெறாது என்று இந்தியா பதில் கொடுத்துள்ளது.

More News >>