மல்லையாவை நாடு கடத்த தடையில்லை மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம்
இந்திய அரசு தன்னை நாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் விஜய் மல்லையா இந்திய அரசால் தேடப்பட்டு வருகிறார். மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று அங்கு வசித்து வருவதை அறிந்த இந்திய அரசு, மல்லையாவை கைது செய்ய இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்தது.
இதுகுறித்த வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்த தடையில்லை என கடந்த டிசம்பர் மாதம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால், அதனை எதிர்த்து மல்லையா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால், இந்திய அரசால் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில், விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனுவை இன்று விசாரித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மல்லையாவின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்திய அரசு மல்லையாவை நாடு கடத்த எந்தவொரு தடையும் இல்லை என தெரிவித்துள்ளது.
இதனால், உடனடியாக மல்லையா கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.