அமெரிக்கக் கூடைப்பந்து மைதானத்தில் பத்மாவத் நடனம்: ஆர்ப்பரித்த அமெரிக்கர்கள்!
பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி, தீபிகா படுகோன் நடித்த ’பத்மாவத்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. 200 கோடி ரூபாய் செலவில்தயாரிக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட திரைப்படத்தில், தீபிகாவின் கோமர் நடனம் வெகு சிறப்பாகப் பேசப்பட்டு பலரது பாராட்டுகளையும் எதிர்ப்புகளின் ஊடே பெற்றுள்ளது.
’பத்மாவத்’ திரைப்படத்தில், யூடியூப்பில் பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘கோமர்’ பாடலுக்கு , ராஜஸ்தானி நடனமான கோமரை இப்படத்துக்கென பிரத்யெகமாகக் கற்றுக்கொண்டு ஆடி அசத்தியுள்ளார் தீபிகா.
இந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் குறித்து தீபிகா படுகோன்கூறுகையில், “என் சினிமா வாழ்க்கையில் மிகவும் கடினமான பாடல் இது. அந்த நாளை நான் மறக்கவே மாட்டேன். அந்தப் பாடலின் ஷூட்டிங்ஆரம்பித்தபோது, பத்மாவத் ஆன்மாவே என்னுள் புகுந்ததுபோல உணர்வு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு இந்த உணர்வு எனக்குள் இருக்கும்” என்று ஒரு விழாவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் குறிப்பிட்ட கோமர் நடனம், சுழன்று சுழன்று ஆடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலுக்காக 66 முறை சுழன்று சுழன்று நடனமாடியிருப்பார் தீபிகா. இந்த விசேஷப் பாடலைத் தான் தற்போது அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டுத் தொடரில் அறிமுக வரவேற்பு நடனமாக ஆடி கொண்டாடியுள்ளனர் அமெரிக்க பாலிவுட் ரசிகர்கள்.
கடினமான இந்த கோமர் நடனத் தாளங்களுக்கு ஏற்ப அமெரிக்கப் பெண்கள் ஆடிய ‘பத்மாவத்’ கோமர் நடனம் தற்போது வைரல் லிஸ்டில் டாப் ஹிட்டாக இடம்பெற்றுள்ளது.