தென்காசியில் கிருஷ்ணசாமிக்கு டப் கொடுக்கும் தி.மு.க. வேட்பாளர்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தென்காசி மக்களவை தொகுதி மீது தற்போது அனைவரது கவனமும் விழுந்துள்ளது. அதற்கு முதல் காரணம் 28 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. இந்த தொகுதியில் போட்டியிடுவதுதான்.

தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் இந்த தென்காசி மக்களவை தொகுதிக்குள் வருகின்றன. பொதுவாக இந்த மக்களவை தொகுதியை பொறுத்தவரை தேவர் சமுதாய மக்கள் வாக்குகள்தான் ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் வகையில் உள்ளது. கட்சிகளும் இதனை கருத்தில் கொண்டே தங்களது வேட்பாளர்களை நிறுத்தும்.

திமுக இந்த தொகுதியில் கடைசியாக 1991ம் ஆண்டில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரசிடம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இந்த தொகுதியை தனது கூட்டணி கட்சியினருக்கே கொடுத்து வந்தது. ஆனால் இந்த முறை தி.மு.க.வே களத்தில் இறங்கியுள்ளது. இதுதான் இந்த தொகுதியை அனைவரும் திரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணம்.

தென்காசி மக்களவை தொகுதியில், தி.மு.க. சார்பில் தனுஷ் குமாரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய கட்சி தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியும், அ.ம.மு.க. சார்பில் பொன்னுதாயும் போட்டியில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ண சாமியை பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணியில் அவர் போட்டியிடுவது பெரிய பலம். இரண்டாவது அவருக்கு என்று குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. அதேசமயம் அ.ம.மு.க. வேட்பாளர் தேவர் சமுதாய வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளதால் அது கிருஷ்ண சாமிக்கு மைனஸ். மேலும், காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளர் களத்தில் இருப்பதால் கிருஷ்ணசாமிக்கு போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் தென்காசி தொகுதியில் அதன் தோழமை கட்சியான தி.மு.க. போட்டியிடுகிறது. ஆக இது .தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாருக்கு பெரிய ப்ளஸ். இருப்பினும், டாக்டர் கிருஷ்ணசாமி அவருக்கு பெரிய சோதனையாக இருப்பார்.

அ.ம.மு.க. சார்பில் பொன்னுத்தாய் என்பவர் போட்டியிடுகிறார். தேவர் சமுதாய வாக்குகளை இவர் பிரிப்பார். அதேசமயம் அவருக்கு பெயரை வில்லியாக அமைந்துள்ளது. அவரை தவிர்த்து பொன்னுத்தாய் பெயரில் 3 பெண்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதனால் வாக்காளர்களுக்கு சிறிது குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கருணாநிதி மரணம் குறித்து விசாரணையாம்...ஏட்டிக்குப் போட்டியாக எடப்பாடி அறிவிப்பு

More News >>