ஹிட்லர் உயிரோடு இருந்திருந்தால் மோடியின் சர்வாதிகாரத்தை பார்த்து தூக்கில் தொங்கியிருப்பார் மம்தா கடும் தாக்கு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை வைத்து அரசியல் சூதாட்டம் ஆடுகிறார் மோடி என்றும் ஹிட்லர் ஒருவேளை உயிரோடு இப்போது இருந்திருந்தால், மோடியின் சர்வாதிகாரத்தை பார்த்து தூக்கில் தொங்கியிருப்பார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, கடந்த தேர்தல் அறிக்கையிலும் ராமர் கோயிலை கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தே இந்துக்களின் வாக்குகளை பெற்று மோடி வெற்றி பெற்றார்.

ஆனால், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும், வரும் தேர்தலிலும் அதே வாக்குறுதியை மீண்டும் கொடுத்துள்ளார். இம்முறை மோடியை மக்கள் நம்பமாட்டார்கள் என்றுக் கூறிய மம்தா பானர்ஜி, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களில் ஓட்டு கேட்டு வருகிறார் மோடி என சாடியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் என மோடி சொல்கிறார். இப்படி சொல்லி சொல்லி மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாரா தெரியவில்லை என மம்தா கூறியுள்ளார். இந்திய ராணுவம் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. ராணுவத்திற்கும் அரசியலுக்கும் எங்கிருந்து தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம் என்றும் நாங்கள் தான் நாட்டின் காவலாளி (சவுகிதார்) என்றும் போலி பிரசாரம் செய்கிறார் மோடி, அதைவிட கொடுமை என்ன வென்றால், அரசு அதிகாரிகளை தனது கைப்பாவையாக நடத்தி வருகிறார். சர்வாதிகாரி ஹிட்லர் ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் மோடியின் இந்த கொடூர சர்வாதிகாரத்தைப் பார்த்து அவரே தூக்கில் தொங்கியிருப்பார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

More News >>