காலியாக 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் - ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான கனகராஜ் மரணமடைந்தார். இதனால் இந்த தொகுதியுடன் தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருந்தது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் வழக்கில் அத்தொகுதியில் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதி தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்று விட்டார். வழக்கு முடிந்ததால் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதியே தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தது. இதற்கிடையே இன்று திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைகிறது என்றும், மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

More News >>