`13 பட்ஜெட் தாக்கல் செய்த `நிதி நாயகன் - கேரள முன்னாள் அமைச்சர் மரணம்

கேரள முன்னாள் அமைச்சர் கே.எம்.மாணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

கரிங்கோழக்கல் மாணி மாணி என பரவலாக அறியப்படும் இவரை கேஎம் மாணி என அழைத்து வந்தனர். ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் அதில் இருந்து விலகி மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார். இது கேரள காங்கிரஸ்(மா) என அழைக்கப்பட்டு வந்தது. இந்த கட்சி அகில காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை விட முழுக்க முழுக்க மதசார்பற்ற கொள்கைகளை கொண்டதாக உருவாக்கப்பட்டது. காங்கிரஸில் இருந்தபோது 13 நிதிநிலை அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்தவர். இந்த அளவுக்கு யாரும் இதுவரை கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை.

1965-ம் ஆண்டில் பாலை சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினர், கேரள அரசில் நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றியவர் என்ற பெருமைகளுக்கும் சொந்தக்காரர். உடல்நலக்குறைவின் காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

அவரது உடல்நிலை முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். மே.எம்.மாணியின் மறைவு கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>